

அரசின் தடையை மீறி மீன், இறைச்சிக் கடைகளைத் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இறைச்சி மற்றும் மீன் வாங்குபவர்கள் சனிக் கிழமைகளில் கடைகளில் பெருமளவில் ஒன்று கூடினர். இதையடுத்து, சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் இறைச்சி, மீன் விற்பனைக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாநகரப் பகுதியில் ஸ்டோனி பிரிட்ஜ் அருகே செயல்படும் மீன் மார்க்கெட் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் கோழி, ஆடு இறைச்சி விற்பனைக் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளை இன்றும் (சனி) நாளையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனி) அனைத்து வகையான இறைச்சிக் கடைகளும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி இறைச்சிக்கடைகளைத் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்’ என்றார்.