Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

தபால், இயந்திர வாக்குகளை ஒன்றாக எண்ணலாம் : தேர்தல் அதிகாரியிடம் அமைச்சர் ஜெயக்குமார் மனு

திமுக கூறுவதுபோல தேர்தல் ஆணைய விதிமுறைகளை மாற்ற வேண்டாம். தபால் வாக்குகள், மின்னணு இயந்திர வாக்குகளை ஒன்றாக எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (மே 2) நடக்கிறது. இதுதொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். தொடர்ந்து மின்னணு இயந்திரங்கள் வரிசைப்படி எடுத்து வரப்பட்டு அவற்றில் பதிவான வாக்குகள் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்கு முடிவுகள் வருவதற்கு காத்திருக்காமல், மின்னணு இயந்திரங்களின் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் தெரிவித்தது.

இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததுடன், தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே, மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், அதிமுக சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று ஒரு மனுவை கொடுத்துள்ளார். அதில், ‘‘தபால் வாக்குகளை எண்ணி, முடிவை அறிவித்த பிறகு, மின்னணு இயந்திரங்களில் வாக்குகளை எண்ண வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை பின்பற்றினால், அது தேர்தல் ஆணைய விதிகளை மீறுவதுபோல ஆகும்.

எனவே, தேர்தல் ஆணைய விதிமுறைகளை மாற்ற வேண்டாம். தேர்தல் ஆணையத்தின் விதிகளை பின்பற்றியே வாக்குகள் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்குகளுடன், மின்னணு இயந்திர வாக்குகளும் ஒரே நேரத்தில் எண்ணப்பட்டு, ஒரே நேரத்தில் முடிவுகளை அறிவிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியமைக்கும்

முன்னதாக, சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை நேற்று காலை சந்தித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகள். கடந்த 2016-ம் ஆண்டும் இதுபோலவே கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், அதிமுக ஆட்சியமைத்தது. அதேபோல, இப்போதும் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x