

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல்சார் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
நிகழ் கல்வி ஆண்டில் இம்மன்றங்களின் மூலம் குறுவள மைய அளவிலான கட்டுரைப் போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ‘எனது கனவுப்பள்ளி’, ‘எனது பள்ளி நூலகம்' என்ற தலைப்புகளில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ‘கரோனா கால கதாநாயகர்கள்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
வகுப்புகளின் அடிப்படையில் 2 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல்பரிசாக ரூ.7 ஆயிரம் மதிப்பில் டேப்லெட், 2-ம் பரிசாக ரூ.4 ஆயிரம் மதிப்பில் ஸ்மார்ட் செல்போன், 3-ம் பரிசாக ரூ.1,000 மதிப்பிலான அறிவியல் சார் கால்குலேட்டர் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜலட்சுமி வழங்கினார்.
மொத்தம் 119 குறுவள மையங்களில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ஒரு பள்ளிக்கு 5 மாணவர்கள் வீதம் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட திட்ட உதவி அலுவலர் ந.ரவிச்சந்திரன் மற்றும் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.