

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் சிகிச்சை பெற வசதியாக 2,500 படுக்கை வசதிகளுடன் 23 ஆற்றுப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள், ஆக்சிஜன் விநியோகஸ்தர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியர் ராமன் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற தேவையான படுக்கை வசதிகள், உயிர் காக்கும் கருவிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளும் தேவையான அளவு தயார் நிலையில் உள்ளன.
சேலம் மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு கலன் ஏற்கெனவே அமைக்கப்பட்டு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. உயிர் காக்கும் கருவிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 550 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.
கூடுதலாக 350 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல வசதிகள் கொண்ட 175-க்கும் மேற்பட்ட படுக்கை வதிகள் தனியார் மருத்துவ மனைகளிலும் தயார் நிலையில் உள்ளன.
தொற்றால் பாதிக்கப்பட்டவர் கள் தங்கி சிகிச்சை பெற மாவட்டம் முழுவதும் 23 தற்காலிக கரோனா ஆற்றுப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ள. இம்மையங்களில் 2,500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை தவிர அரசின் வழிகாட்டுதலின் படி கரோனா சிகிச்சை அளிக்க மாவட்டம் முழுவதும் 33 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1,800-க்கு மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.