தபால் வாக்குகளை இன்றும் செலுத்தலாம் : ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு தகவல்

தபால் வாக்குகளை இன்றும் செலுத்தலாம் :  ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு தகவல்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் செ.பால்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவை தொகுதி தேர்தலிலும் மொத்தம் 9,236 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கான தபால் வாக்குஅஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பெரும்பாலும் 77 சதவீத தபால் வாக்குகள் பதிவாகி திரும்பி வந்துள்ளது.

ஒருசில ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள்கள் கடைசி நேரத்தில் வாக்கை செலுத்தலாம் என கையில் வைத்திருப்பதாக தெரிகிறது. அவர்கள் தங்களுடைய தபால் வாக்கினை கவனமாக பதிவு செய்து,உடனடியாக இன்று அல்லது நாளை முற்பகலுக்குள் அஞ்சலகத்தில் செலுத்தி விடுங்கள்.

அஞ்சலில் செலுத்தும்போது 30.04.2021- க்கு பின்பு அனுப்பப்படும் வாக்குகள் உரிய நேரத்தில் சென்று சேராது. மே -2 -ம் தேதி காலை 8 மணிவரை தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றால் அஞ்சலக வேலைநேரம் நண்பகல் 2 மணியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, காலையிலேயே உங்கள் வாக்கை அஞ்சலகம் மூலம் அனுப்பி விடுங்கள். மேலும் இம்முறை தாலுகா மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குசேகரிப்பதற்கான பெட்டி கிடையாது.

கடந்த சட்டப் பேரவை தேர்தலில் ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் தனித்தனியாக அந்தந்த தொகுதிக்கான ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தபால் வாக்கு சேகரிப்பதற்கான வாக்குப்பெட்டி காவல்துறை கண்காணிப்புடன் வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இந்த முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எந்த சட்டப் பேரவை தொகுதியிலும் தனியாக வாக்குப்பெட்டி வைக்கப்படவில்லை.

எனவே, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைவசம் இருக்கும் தபால் வாக்கை கவனமாக பதிவு செய்து, உடனடியாக அருகில் இருக்கக்கூடிய அஞ்சலகங்களில் தபால் வாக்கு கவரினை செலுத்த வேண்டும். தபால் வாக்கு செலுத்த அஞ்சல் வில்லை ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in