

பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் ராமன் பேசியதாவது:
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை முழுமையாக தடுத்திட, தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் வெளியில் வராமல் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
தொற்று கண்டறியப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகளில், தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் உரிமையாளர்கள் கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிவதையும் உறுதி செய்திட வேண்டும்.
ஒவ்வொரு கடைகளின் முகப்பில் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிருமிநாசினி அல்லது தண்ணீர் தொட்டியுடன் கை கழுவ சோப்பு உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது தொடர்பாக ஒலிப்பெருக்கிகள் மூலமாகவும், தூய்மை காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாகவும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முகக் கவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படுவதோடு, தொடர்ந்து முகக்கவசம் அணியாத வர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது வரை சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றாத 74,684 தனி நபர்கள், பல்வேறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து, இதுவரை ரூ.1 கோடியே 62 லட்சத்து 53 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மேட்டூர் துணை ஆட்சியர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது சபீர் ஆலம், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) (பொ) செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.