

குமாரபாளையத்தில் குழந்தையை ரூ.2.50 லட்சத்துக்கு விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
குமாரபாளையம் அருகே குள்ளங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தீபா (19). இவரது கணவர் சண்முகம் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பிரனேஷ் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இருவர் தீபாவிடம் பேசி அவரது குழந்தையை ஈரோட்டைச் சேர்ந்த தம்பதிக்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையை இழந்த தீபா கடந்த 21-ம் தேதி மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் செய்தார். இதன்பேரில் விசாரணை நடத்தியதில் உண்மையெனத் தெரியவந்தது. இதையடுத்து குமாரபாளையம் காவல் துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குழந்தையை ரூ.2.50 லட்சத்துக்கு விற்பனை செய்த நாகராஜ் (61), தீபாவின் உறவினர் கார்த்தி (41) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இருவர் அளித்த தகவலின்படி குழந்தையை போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.