Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM
கரோனா பரவலைத் தடுக்க அரசின் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல்அமலுக்கு வந்ததால் கோவையில்மால், சலூன்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவை மூடப் பட்டன.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவற்றை தமிழகஅரசு செயல்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, அரசு பிறப்பித்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. கோவை மாவட்டம் முழுவதும்150-க்கும் மேற்பட்ட இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன. தினமும் காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் இங்கு வந்து உடற்பயிற்சி செய்துவந்தனர். அரசின் தடை உத்தரவைத் தொடர்ந்து, உடற்பயிற்சிக் கூடங்கள் நேற்று முதல் திறக்கப்படவில்லை. சில உடற்பயிற்சிக் கூடங்களுக்கு வந்த வாடிக்கையாளர்கள், அங்கு ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸை பார்த்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
கோவையில் ஆர்.எஸ்.புரம், புரூக் பாண்ட் சாலை, பீளமேடு, ரயில் நிலையம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரிய கூட்டரங்குகள் (ஆடிட்டோரியம்), கருத்தரங்க கூடங்கள் உள்ளன. இங்கு கலை, இலக்கிய, கலாச்சார நிகழ்ச்சிகள் வார இறுதி நாட்களில் அதிகளவில் நடத்தப்பட்டுவந்தன. அரசின் உத்தரவைத் தொடர்ந்து கூட்டரங்குகள் மூடப்பட்டன.
புருக்பாண்ட் சாலை, சரவணம்பட்டி, பீளமேடு, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரிய வணிக வளாகங்கள் (மால்)திறக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சலூன்கள், பெண்களுக்கான அழகு நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கரோனா பரவலுக்கு வாய்ப்பு அதிகம் இருப்ப தால், சலூன்கள், அழகு நிலையங் கள் இயங்க அரசு தடை விதித்தது. இதனால் நேற்று முதல் இவைதிறக்கப்படவில்லை. உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. உள்ளே அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்டநிர்வாகத்தினர் மற்றும் மாநகராட்சிஅதிகாரிகள் கூறும் போது, ‘‘கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு பிறப்பித்த உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படுகி றதா என்பதை மாவட்ட வருவாய்த் துறையினர், மாநகராட்சி நிர்வாகத்தினர், பிற உள்ளாட்சி நிர்வாகத்தினர் இணைந்து கண்காணித்து வருகின்றனர். அரசின் தடை உத்தரவை மீறி திறக்கப்படும் வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், சலூன்கள், அழகு நிலையங்கள், திரையரங்குகள், மால், கூட்டரங்கு நடத்தும் நிர்வாகங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அரசு தடை விதித்துள்ளது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்துகள், வாடகை மற்றும்டாக்ஸி வாகனங்கள், ஆட்டோக்களில் அரசின் புதிய கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப் படுகிறதா எனவும் கண்காணிக்கப் படுகிறது’’ என்றனர்.
வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு தடை
கரோனா தொற்று பரவலைத் தடுக்க, கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களின் வழிபாட்டுக்கும், மதம் சார்ந்த திருவிழாக்கள் நடத்தவும் அரசு தடைவிதித்துள்ளது. அதேசேமயம், வழிபாட்டுத் தலங்களில் பணியாற்றுவோர் மட்டும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை நடத்த அரசு அனுமதித்துள்ளது. கோயில்களில், முன்னரே திட்டமிடப்பட்டிருந்த குடமுழுக்குகள் மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், புதியதாக குடமுழுக்குகள், திருவிழாக்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை. அரசின் உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதுதொடர்பான அரசின் அறிவிப்பும் வழிபாட்டுத் தலங்கள் முன்பு போர்டில் எழுதி வைக்கப்பட்டது. கோவையில் மருதமலை முருகன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில், தண்டு மாரியம்மன் கோயில், கோட்டை சங்கமேஸ்வரர் கோயில், புலியகுளம் விநாயகர் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் என மாவட்டம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்கள் மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT