

விழுப்புரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் நேற்றுமுன்தினம் வெளியே சுற்றிய 584 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கரோனாதொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கும் வகையில் 79 இடங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் முகக்கவசம் அணியாமல் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித்திரிந்த 584 பேரிடம் ரூ. 200 வீதம் ரூ.1,16,800 வசூலிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 4 பேரிடம் தலா ரூ. 500 வீதம் ரூ.2,000 வசூலிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு விதியை மீறி பைக்கில் வந்த 1,400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.