

சேலம்: ஓமலூர் அருகே விவசாய கிணற்றுக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிகப்பிரிவு உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.
ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி தெற்கத்திக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (30). எம்பிஏ பட்டதாரியான இவர் விவசாய கிணற்றுக்கு தற்காலிக மின் இணைப்பு பெற காடையாம்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு வணிகப்பிரிவு உதவியாளர் சுந்தரராஜன் (49), மின் இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் ரூ.5 ஆயிரத்துக்கு சம்மதித்த நிலையில், லஞ்ச வழங்க விரும்பாத பிரபு, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் செய்தார்.
போலீஸாரின் ஆலோசனைப்படி பிரபு ரூ.5 ஆயிரத்தை சுந்தரராஜனிடம் வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சுந்தரராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.