சாலையின் நடுவில் தடுப்பு அமைத்ததால் கடையநல்லூரில் விபத்து அபாயம் :

கடையநல்லூரில் சாலையில் நடுவே தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. (அடுத்த படம்) தடுப்பு அமைத்ததால் கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
கடையநல்லூரில் சாலையில் நடுவே தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. (அடுத்த படம்) தடுப்பு அமைத்ததால் கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
Updated on
1 min read

கடையநல்லூரில் சாலையின் நடுவில் தடுப்பு அமைத்ததால் வாகனங்கள் அதிவேகமாகச் செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும்அபாயம் இருப்பதாக அப்பகுதிபொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் இருந்து ரஹ்மானியாபுரம் முதல் தெரு வரை உள்ளநெடுஞ்சாலை சமீபத்தில் அகலப்படுத்தப்பட்டது. பாதசாரிகள் நடந்துசெல்ல சாலையின் இரு ஓரங்களிலும் நடைபாதைகள் அமைக்கப்பட்டன. சாலை அகலப்படுத்தப்பட்டதால் போக்குவரத்து எளிதாக இருந்தது.

இந்நிலையில், சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையின் அகலம் குறைந்துள்ளது. மேலும், வாகனங்களில் செல்வோர் அதிவேகமாகச் செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும் என்று இப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “இந்த சாலையில் மருத்துவமனைகள், மசூதிகள், திருமண மண்டபம், கடைகள் உள்ளன. இதுவரை இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி, விபத்துகள் ஏற்பட்டதில்லை. சாலையை அகலப்படுத்தி, நடுவில் தடுப்புச் சுவர் வைத்ததால் அகலம் குறைவாக காணப்படுகிறது. தடுப்புச் சுவர் வைத்து, ஒருவழிப் பாதையாக மாற்றியிருப்பதால் வாகனங்கள் முன்பை விட அதிவேகமாகச் செல்கின்றன.

இதனால், கடைகளுக்கு சரக்குகளை கொண்டுவரும் வாகனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாகனங்களையும் சாலையோரத்தில் நிறுத்த முடியவில்லை.

விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளில் சாலையை அகலப்படுத்தி, நடுவில் தடுப்புச் சுவர் அமைத்தால் விபத்துகளை தடுக்கலாம். தேவையில்லாத இடத்தில் தடுப்புச் சுவர் அமைத்திருப்பதால் சிக்கல்கள்தான் அதிகரிக்க வாய்ப்புஉள்ளது.

எனவே, இந்த இடத்தில்தடுப்புச் சுவரை அகற்ற நடவடிக்கைஎடுக்க வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in