

சாத்தான்குளம் அருகே உள்ள துவர்க்குளத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் முருகலிங்கம் (22). திருநெல்வேலி சட்டக்கல்லூரி மாணவர். பூர்வீக சொத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய, சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முருகலிங்கம் விண்ணப்பித்தார். மண்டல துணை வட்டாட்சியர் சுல்தான் சலாவுதீன் என்பவர், பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் கேட்டுள்ளார். மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்த ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை முருகலிங்கம், நேற்று மண்டல துணை வட்டாட்சியர் சுல்தான் சலாவுதீனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்குமறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ், ஆய்வாளர் ஆத்தீஸ் மற்றும் போலீஸார், வட்டாட்சியர் அலுவலகத்தில் நுழைந்து சுல்தான் சலாவுதீனை கையும் களவுமாக கைது செய்தனர்.
தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலக கதவுகளை மூடி சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரது அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இச்சம்பவத்தால் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.