

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே கரும்பு தோட்டத்தில் 9 மயில்கள் இறந்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் அருகே பிலிக்கல்பாளையம் கரட்டூரில் பிரசித்தி பெற்ற விஜயகிரி பழநியாண்டவர் கோயில் அமைந்துள்ளது. காவிரிக்கரையோரத்தில் உள்ள கோயிலைச் சுற்றிலும் விளைநிலங்கள் நிறைந்துள்ளன. இதனால் காலை, மாலை வேளைகளில் மயில்கள் இரை தேடுவதற்காக அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்த அம்மையப்பன் என்பவருக்குச் சொந்தமான கரும்பு தோட்டத்தில் 6 பெண் மயில்கள் மற்றும் 3 ஆண் மயில்கள் இறந்து கிடந்தன. அதிர்ச்சிடையந்த மக்கள் இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல் துறை மற்றும் நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த மயில்களை மீட்டு இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேடர்பாளையம் போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.