Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் - நச்சுக்கழிவுநீரை வெளியேற்றிய தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை : பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை

ஈரோடு

பெருந்துறை சிப்காட்டில் நச்சுக்கழிவுநீரை வெளியேற்றிய தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தேக்கி வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான லிட்டர் கழிவுநீர் மற்றும் நச்சு திடக்கழிவுகளை அகற்ற வேண்டுமென சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் 14 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இத் தொழிற்சாலைகள் இணைந்து, ‘பெருந்துறை தோல் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்’ என்ற பெயரில் ஒரு பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளன.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீர் முழுமையாகச் சுத்திகரிக்கப்படுவதில்லை என்பதால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என நாங்கள் புகார் அளித்தோம். அதன் அடிப்படையில், மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பொதுசுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை ஓராண்டுக்கு முன்னர் நிறுத்தி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த வாரத்தில் பெய்த மழையை சாதகமாகப் பயன்படுத்தி, இந்த பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பல லட்சக்கணக்கான லிட்டர் நச்சுக் கழிவு நீர் குழாய் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது. இது குறித்து நாங்கள் ஆதாரத்துடன் அளித்த புகாரையடுத்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜி.உதயகுமார், உதவி பொறியாளர் சி.முத்துராஜ் ஆகியோர் கடந்த 18-ம் தேதி ஆய்வு செய்தனர்.

இதில், பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், லட்சக்கணக்கான லிட்டர் சுத்திகரிக்கப்படாத நச்சு கழிவுநீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதும், நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள நச்சு திடக்கழிவுகள் அங்கு இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய தலைமைக்கு பரிந்துரை செய்திருப்பதாக பெருந்துறை சுற்றுச்சூழல் பொறியாளர் தெரிவித்துள்ளார். எனவே, பெருந்துறை சிப்காட்டில் விதிமுறைகளை மீறி கழிவுநீரை வெளியேற்றிய தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, செயல்படாமல் உள்ள பொதுசுத்திகரிப்பு நிலையத்தையும் நிரந்தரமாக மூட வேண்டும். கழிவுநீரை வெளியேற்றிய ஆலை உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சட்டவிரோதமாக தேக்கி வைக்கப்பட்டுள்ள நச்சுக் கழிவுநீரையும், நச்சு திடக்கழிவுகளையும் அப்புறப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x