

டாஸ்மாக் பார்களை மூடுவதோடு, மதுபான விற்பனை நேரத்தை இரவு 8 மணியோடு முடிக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு கடைகள் மூடப்படும் நிலையில், கடைசி நேர நெரிசலைக் கட்டுப்படுத்த, இரவு 8 மணிக்கு டோக்கன் வழங்கவும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் திருச்செல்வன் கூறியதாவது:
டாஸ்மாக் கடை மற்றும் பார்களின் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்து இரவு 9 மணி வரை செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் மது வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், நாள்தோறும் பணியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், இரவு 9 மணிக்கு விற்பனையை முடித்து, கணக்குகளை முடிக்கும் போது இரவு 10 மணியைத் தாண்டி விடுகிறது. இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளதால், அதன் பின்னர் பணியாளர்கள் வீடு திரும்புவதில் சிக்கல் உள்ளது. எனவே, டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், டாஸ்மாக் பார்களை மூட வேண்டும். மேலும், ஞாயிறு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கிறது. எனவே, ஒவ்வொரு கடையிலும் கூடுதல் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.