கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைப்பு : போதிய இருப்பு உள்ளதாக சேலம் ஆட்சியர் தகவல்

சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை, ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.
சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை, ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போதிய இருப்பு உள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமில், 120-க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமை, பார்வையிட்ட ஆட்சியர் ராமன் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று, தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று பரவல் அதிகரித்து வருவதை தடுக்க பொது மக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும்.

மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை 2 லட்சத்து 8 ஆயிரத்து 364 பேர், 2-வது தவணை 46,283 பேர் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 647 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணை 34 ஆயிரத்து 918 பேர், 2-வது தவணை 2 ஆயிரத்து 163 பேர் என மொத்தம் 37 ஆயிரத்து 81 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ராஜேஷ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in