

கரோனா சிகிச்சை மைய விவரங்களை அறிய தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலுள்ள தடுப்பூசி மையங்கள், பரிசோதனை மையங்கள், மாதிரி சேகரிப்பு மையங்கள், மற்றும் கரோனா சிகிச்சை மையங்களின் அமைவிடங்களை எளிதில் கண்டுகொள்ள, மாநிலத்திலேயே முதல்முறையாக மாவட்ட நிர்வாகம் மூலம் புதிய இணையதள வசதியை திருநெல்வேலி ஆட்சியர் வே.விஷ்ணு அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
கரோனாவின் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்களை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் https://covidcaretirunelveli.in என்ற புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 83 கரோனா தடுப்பூசி மையங்கள், 54 மாதிரி மையங்கள், 5 சோதனை மையங்கள் மற்றும் 28 கரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த புதிய இணையதள வசதியின் மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகிலுள்ள கரோனா தடுப்பூசி மையம், சோதனை மையம் அல்லது சிகிச்சை மையங்களின் அமைவிடங்களை ஜி.ஐ.எஸ். வரைபடம் மூலம் எளிதாக கண்டுகொள்ளலாம்.
இருப்பிடத்திலிருந்து மையங்களுக்கு செல்லும் பாதைகள் பற்றிய விவரங்களும், மையத்தின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற தகவல்களும் கிடைக்கும். கரோனா குறித்து எழும் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் இந்த இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண்களும், அதற்குரிய வாட்ஸ்அப் எண்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், துணை ஆட்சியர் (பயிற்சி) மகாலெட்சுமி, தேசிய தகவல் மைய மேலாளர்கள் தேவராஜன், ஆறுமுகநயினார் உடனிருந்தனர்.