Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM

கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் தளம் அமைக்க தொடரும் எதிர்ப்பு : விவசாய சங்கங்களிடையே கருத்து மோதலால் குழப்பம்

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள விவசாயிகளிடையே தொடர்ந்து எதிர்ப்பு நீடிக்கிறது. இந்நிலையில், திட்டத்தை உடனே தொடங்க வேண்டுமென சில அமைப்பினர் அழுத்தம் கொடுப்பதால் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர்.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர், கீழ்பவானி வாய்க்கால் மூலம் பயணித்து நேரடியாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இத்துடன் கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுவதுடன், சுற்றுவட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கும் நீர் கிடைத்து வருகிறது.

இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் ரூ.709 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைத்தல் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டம் தயாரிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிலத்தடி நீரைப் பாதிக்கும், சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டம் எனக் கூறி பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர். இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கூடாது என நபார்டு வங்கிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடமும் திட்டத்தைக் கைவிடக் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆரம்பத்தில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சில அமைப்பினர், திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என தற்போது குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளதால், விவசாயிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பி.காசியண்ணன், கி.வடிவேல், ஏ.ராமசாமி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கையெழுத்திட்ட மனு, ஈரோடு ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் நேற்று அளிக்கப்பட்டது. இந்த மனுவில், கீழ்பவானி வாய்க்காலில் ஏப்ரல் 30-ம் தேதி நீர் திறப்பு நிறுத்தப்படும் நிலையில், உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகள் நடந்தால் தடுத்து நிறுத்தப்படும் என கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் செ.நல்லசாமி கூறியதாவது;

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது. இந்த திட்டம் நிறைவேற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது தமிழகத்தில் நிலையான அரசு இல்லை. எனவே, தமிழகத்தில் மே 2-ம் தேதிக்குப்பின்னர் விவசாயிகளிடம் கருத்து கேட்டபின்பே திட்டத்தை செயல்படுத்துவதா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். அதற்கு முன்பாக திட்டப்பணிகளைத் தொடங்கினால், அதனை விவசாயிகள் தடுத்து நிறுத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் சுதந்திரராசு கூறும்போது, ‘விவசாயிகளிடம் நேரடித் தொடர்பு இல்லாத பலரும் பாசனசபைகளில் நிர்வாகிகளாக இருக்கும் நிலை தற்போது உள்ளது. பாசனசபைகளுக்கு தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு, விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டு திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை முடிவு செய்யலாம்’ என்றார்.

இதனிடையே இந்த திட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயத்தை நாட சுற்றுச்சூழல் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x