அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது : திருச்சி மாவட்ட மருத்துவம், சுகாதாரத் துறை அலுவலர்கள் தகவல்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது  :  திருச்சி மாவட்ட மருத்துவம், சுகாதாரத் துறை அலுவலர்கள் தகவல்
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துமனைகளிலும் நோயாளிகளுக்கு வழங்குவதற்கான ஆக்சிஜன் போதிய அளவுக்கு இருப்பில் உள்ளது என்று மருத்துவம், சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று 303 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையும் சேர்த்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,212 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட, மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், போதிய அளவு கரோனா தடுப்பூசிகளை வரவழைப்பது, தடுப்பூசி போடுவது ஆகிய பணிகளில் மாவட்ட சுகாதாரத் துறை, மருத்துவத் துறை தீவிரம் காட்டி வருகிறது.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2,645 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,80,347 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், 23,097 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே, வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் நோயாளிகளுக்கு வழங்குவதற்கான ஆக்சிஜன் போதிய அளவு இருப்பில் உள்ளதாக மருத்துவம், சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியது: கரோனா பரவலால் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 450 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சைப் பிரிவு பழைய கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 350-க்கும் அதிகமான படுக்கைகளுக்கு அருகே நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்கும் வசதி உள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் 10,000 லிட்டர் ஆக்சிஜனை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் அளவுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு முன்பு தினமும் 1,000 லிட்டர் முதல் 1,500 லிட்டர் வரை ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தினமும் 3,000 லிட்டர் முதல் 3,500 லிட்டர் வரை பயன்படுத்தப்படுகிறது.

ஆக்சிஜன் பயன்பாடு முறையாக கண்காணிக்கப்பட்டு, அவ்வப்போது தேவைப்படும் அளவுக்கு ஆக்சிஜன் வரவழைக்கப்படுகிறது. இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பில் உள்ளன என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in