சாலையோரங்களில் குப்பையை எரிப்பதால் பொதுமக்கள் அவதி :

சாலையோரங்களில் குப்பையை எரிப்பதால் பொதுமக்கள் அவதி :
Updated on
1 min read

திருச்சி மாநகர பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் வீடுகளுக்கே நேரில் வந்து குப்பையை வாங்கி, நுண் உர செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

எனினும் சில தொழில் நிறுவனங்கள், கடைகள் நடத்தக் கூடியவர்கள் தங்களது குப்பை மற்றும் தொழில் கழிவுகளை முறைப்படி மாநகராட்சி நிர்வாகத்திடம் அளிக்காமல், சாலையோரங்களில் கொட்டுகின்றனர். மேலும் சில பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் முன்புபோல நாள்தோறும் குப்பை வாங்க வராததால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பையை சாலையோரத்தில் கொட்டுவதை வாடிக்கையாக்கிவிட்டனர். இதனால் நகரில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

இதுஒருபுறமிருக்க, சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தாமல் அந்தந்த இடங்களிலேயே தீயிட்டு கொளுத்துவது வழக்கமாகி விட்டது.

இதனால் அவற்றிலிருந்து வெளியேறக்கூடிய புகையால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் அவ்வழியாக வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

மேலும் குப்பை எரிக்கப்படுவதால் ஏற்படும் வெப்பத்தில் அருகிலுள்ள மரக்கன்றுகளும் காய்ந்து கருகி விடுகின்றன.

அண்ணா விளையாட்டரங்க சாலை, பொன்மலைப்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதால், அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் வளர்க்கப்படும் பல மரக்கன்றுகள் பட்டுப் போய் விட்டன.

எனவே சுகாதார சீர்கேடு, சுற்றுச்சூழல் மாசுபாடு தவிர்க்க வீடுகளுக்குச் சென்று நாள்தோறும் குப்பையை சேகரிக்கவும், சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையை தீயிட்டு கொளுத்தாமல் முறைப்படி அப்புறப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in