

கரோனா தொற்றால் உயிரிழக்கும் உடலுழைப்பு தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மலை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்க பேரவைக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் விக்ரமன், அண்ணாமலை, மண்ணு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் வரவேற்றார்.
சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் வீரபத்திரன் தொடங்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பாரி வாழ்த்துரை வழங்கினார். மாநில செயலாளர் குமார் சிறப்புரையாற்றினார். பின்னர், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், மாவட்டத் தலைவராக நடராஜன், மாவட்டச் செயலாளராக கமலக்கண்ணன் மற்றும் பொருளாளராக சிவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், “தொழிலாளர் களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம் மற்றும் விபத்து மரணத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், ஆரம்ப பள்ளி முதல் கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும், திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், கரோனா தொற்றால் உயிரிழக்கும் கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு (நல வாரியத்தில் பதிவு செய்த வர்கள்) ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், அயல்நாட்டுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர் களுக்கு இருப்பதுபோல் உள்நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.