

சேலத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வில் நேற்று 1,002 பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நேற்று நடந்தது. தொடர்ந்து இன்றும், நாளையும் தேர்வு நடக்கிறது.
இத்தேர்வுகளில் பங்கேற்க சேலம் மாவட்டத்தில் 6,686 பேர் விண்ணப்பித்திருந்தனர். சேலம் மாவட்டத்தில் 11 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
சேலம் சின்னத்திருப்பதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த 3 தேர்வுக் கூடங்களில் நேற்று தேர்வு நடைபெற்றது.
இதில், மொத்தம் 1,083 தேர்வர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 1,002 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வு எழுத வந்தவர்கள் முகக் கவசம் அணிந்தும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தேர்வில் பங்கேற்றனர்.
சேலம் ஆட்சியர் ராமன் தேர்வுக்கூடத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும், நடமாடும் குழு மூலம் தேர்வு நடைபெறுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் தேர்வை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.