

சேலம் மாநகராட்சி வஉசி இறைச்சி மற்றும் மீன் மார்க்கெட், சூரமங்கலம் நவீன மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் ஆகியவை இன்றும் (18-ம் தேதி) வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாநகரப் பகுதிகளில் விடுமுறை தினங்களில் சந்தைகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு அதிக அளவில் பொதுமக்கள் வருகை தருவதாலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமையாலும் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் பழைய பேருந்து நிலையம் போஸ் மைதானத்தில் உள்ள வஉசி நாளங்காடி அருகில் (ஆற்றோரம் பாலத்தின் மேல்) உள்ள மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட், சூரமங்கலம் மண்டலம் தர்ம நகர் நவீன மீன் மார்க்கெட் ஆகியவற்றில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு இன்றும் (18-ம் தேதி) வாரந்தோறும் ஞாயிறுக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது.
மாநகராட்சியின் மறுஅறிவிப்பு வரும் வரை இச்சந்தைகளில் மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் நடத்தும் வியாபாரிகளும், குத்தகைதாரர்களும், சந்தைக்கு வருகை தரும் பொதுமக்களும் மாநகராட்சியின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.