

மின் தேவை குறைந்ததால், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தினசரி மின் உற்பத்தியில் 600 மெகா வாட் குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 4 அலகுகளும், 600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 1,440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கோடை காலம் என்பதால், விவசாயப் பணிகளும் குறைந்துள்ளன. இதனால், தமிழகத்தில் மின் பயன்பாடு குறைந்துள்ளது.
இதையடுத்து, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் மின் உற்பத்தி அலகு கடந்த 15-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், தினசரி 840 மெகா வாட் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.