

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. ஈரோடு நகரில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 14-ம் தேதி இரவு கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவும் பல்வேறு பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது.
ஸ்டோனி பாலம் அருகே அசோகபுரியில் உள்ள குடிசைகளில் மழை நீர் புகுந்தது. இதனால் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்தோர், அருகில் உள்ள ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வருவாய்த்துறையினர் செய்து கொடுத்துள்ளனர்.
இதேபோல், பழைய பூந்துறை சாலை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். நகரில் பெய்த மழை வெள்ளம் மற்றும் சூரம்பட்டி தடுப்பணை நிரம்பியதால் வெளியேறிய உபரி நீரால், பெரும்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குண்டேரிப்பள்ளம், மொடக்குறிச்சி, சென்னிமலை, சத்தியமங்கலம், கோபி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மழை பெய்தது. தாழ்வான பகுதியில் உள்ள விளைநிலங்களில் மழை நீர் தேங்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) பெருந்துறை – 49, குண்டேரிப்பள்ளம் – 41, மொடக்குறிச்சி – 32, ஈரோடு – 30, சென்னிமலை – 20, வரட்டுப்பள்ளம் – 14, நம்பியூர் – 12, கொடிவேரி – 7.2, சத்தியமங்கலம் – 7, கவுந்தப்பாடி – 5.2, கொடுமுடி, கோபி 4 மி.மீ.
சேலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி
நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்: ஏற்காடு 15, தம்மம்பட்டி 7, சேலம் 5.8, மேட்டூர் 2.2, வாழப்பாடி 4, ஆணைமடுவு 1 மி.மீ. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், மாலை மேக மூட்டத்துடன், குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.