

சேலம் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும், என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம் ரயில்வே கோட்ட மருத்துவமனையில் 45 வயதுக்கு மேற்பட்ட ரயில்வே அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை ஆட்சியர் ராமன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக ஆட்சியர் ராமன் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும்.
45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
மேலும், அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படுவதோடு, தொடர்ந்து முகக் கவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் போது துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணி உள்பட பலர் இருந்தனர்.