

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பூமியில் இருந்து பார்க்கும் போது நாள்தோறும் நண்பகலில் சூரியன் நமக்கு நேர் உச்சியில் வருவது போல தெரிந்தாலும், உண்மையில் ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே மிகச் சரியாக நேர் உச்சியில் வருகிறது. அப்போது பொருட்களின் நிழல் அந்த பொருட்களின் பரப்புக்குள்ளேயே விழுவதால், வெளியில் அதன் நிழல் தெரியாது. இதனை நிழல் இல்லா நாள் என்கிறோம்.
இந்தஆண்டு திருச்சி மாவட் டத்தில் ஏப்.17-ம் தேதி(இன்று) திருச்சி, மணப்பாறை, துவாக்குடி பகுதிகளிலும், ஏப்.18-ம் தேதி(நாளை) முசிறி, லால்குடி பகுதிகளிலும் நிழல் இல்லா நாள் அமைகிறது. இந்த எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம். உரிய நேரத்தில் சமதளப் பரப்பளவில் ஏதேனும் உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் வெளிப்பக்கம் விழுகிறதா அல்லது நிழல் விழவில்லையா என்பதை செய்து பார்க்கலாம்.
மேலும், உங்கள் ஊரில் எப்போது நிழல் இல்லா நேரம் என்பதை அறிந்து கொள்ள https://alokm.com/zsd.html என்ற இணைப்பில் சென்று, ஊர் பெயரை தட்டச்சு செய்தால், உரிய நேர விவரம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.