

மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டைக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நேற்று காலை நடைபெற இருந்த சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
வேலூரில் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டையில், கிறிஸ்தவ தேவாலயம், ஜலகண்டேஸ்வரர் கோயில், காவலர் பயிற்சி பள்ளி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அருங்காட்சியகங்கள், மாநில சுற்றுலாத்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை வரும் மே 15-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டை நேற்று காலை மூடப்பட்டது. வழக்கம்போல் நடைபயிற்சிக்கு சென்றவர்களை நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். கோட்டையினுள் உள்ள அரசு அலுவலக ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
பிரம்மோற்சவம் நிறுத்தம்
இது தொடர்பாக ஜலகண் டேஸ்வரர் கோயில் அறங் காவலர் குழுத் தலைவர் சுரேஷ் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் பிரம்மோற்சவ விழா நடைபெற வில்லை. இந்தாண்டு பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். கிராம தேவதை பூஜை, பிள்ளையார் பூஜையும் நடைபெற்றது. பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருந்தோம்.
நேற்று முன்தினம் இரவு கோட்டையை மூடுவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். வேறு வழியில்லாமல் பிரம்மோற்ச விழாவை நிறுத்தி விட்டோம். கொடியேற்றம் நடத்திய பிறகு தடை ஏற்பட்டிருந்தால் பரிகார பூஜை நடத்த வேண்டும். ஆனால், கொடியேற்றம் நடைபெறாததால் பரிகார பூஜை ஏதும் நடத்த அவசியம் இல்லை. வரும் நாட்களில் கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும்’’ என தெரிவித்தார்.
வேலூர் கோட்டையுடன் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மேல்பாடி சோழீஸ்வரர் கோயில், முருகன் கோயிலும் மூடப்பட்டது. இங்கு, தினசரி வழக்கமாக மேற்கொள்ளப்படும் பூஜைகள் மட்டும் நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.