

தமிழக அரசின் பொது விநியோகத்திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் இல்லாதவர்களுக்கு மாதம் 5 லிட்டரும், ஒரு சிலிண்டர் இருந்தால் 3 லிட்டர் மண்ணெண்ணெயும், லிட்டர் ரூ.15.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரு சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்துள்ளவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், இந்த மாதம் மாவட்டம்தோறும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைத்து வழங்கப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் அளவில் இருந்து குறைத்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால், ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க, மாதம் 384 கிலோ லிட்டர் ஒதுக்கீடு பெறப்பட்டு வந்தது. இந்த அளவில் 30 சதவீதம் குறைவாக, 264 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே இந்த மாதம் பெறப்பட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் ஒதுக்கீட்டின் அடிப்படையில் மண்ணெண்ணெய் பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கான மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.