திருச்சி மாவட்டத்தில் - திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர் வட்டங்களில் கரோனா தாக்கம் அதிகம் : ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தகவல்

திருச்சி மாவட்டத்தில்  -  திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர் வட்டங்களில் கரோனா தாக்கம் அதிகம் :  ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தகவல்
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டங்களில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வி, ஊரக வளர்ச்சி, வருவாய், சத்துணவு, சமூக நலம், காவல், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் உள்ள அனைத்து நிலை ஊழியர்களும், தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதேபோல, ஊரக மற்றும் நகர் பகுதியில் உள்ள வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், நகர் நல அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் ஆகியோருடனான ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

இந்த கூட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தலைமை வகித்துப் பேசியது:

கரோனா வைரஸ் தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர் ஆகிய வட்டங்களில் நோயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

நோய் அறிகுறி உள்ளவர்களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டார மருத்துவர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்குள் கொண்டு வர வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸ் சிறப்பு தடுப்பு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாம் காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்திலும், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தற்போது நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி, குறிஞ்சி பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்க முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்டத்தில் தற்போது கரோனா வைரஸ் தொற்று 5.01 சதவீதம் உள்ளது.

இதை குறைப்பதற்கு வட்டார மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக பணி செய்து தொற்று பரவுவதைத் தடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில், அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in