Published : 16 Apr 2021 03:13 AM
Last Updated : 16 Apr 2021 03:13 AM

நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் கோடை மழை நீடிப்பு :

திருநெல்வேலி, தென்காசி, குமரி மாவட்டங்களில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் கோடை மழை நேற்று நீடித்தது.

இரு மாவட்டங்களிலும் அணைப்பகுதி களிலும் பிறஇடங்களிலும் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

மணிமுத்தாறு- 1.4, பாளையங் கோட்டை- 5, திருநெல்வேலி- 0.6, மூலக்கரைப்பட்டி- 25, கருப்பாநதி- 30, குண்டாறு- 2, அடவிநயினார்- 8.

143 அடி உச்சநீர் மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 105.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 79.28 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 104.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்ட்டம் 92.90 அடியாக இருந்தது. 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பிறஅணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்ட்டம்):

சேர்வலாறு- 118.24 அடி (156), வடக்குபச்சையாறு- 43.45 அடி (50), நம்பியாறு- 12.72 அடி ( 22.96), கொடுமுடியாறு- 6.30 அடி (52.50), கடனா- 68.80 அடி (85), ராமநதி- 63.25 அடி (84), கருப்பாநதி- 53.15 அடி (72), குண்டாறு- 30.25 அடி (36.10), அடவிநயினார்- 31 அடி (132.22).

விபத்து அபாயம்

திருநெல்வேலி வி.எம். சத்திரத்திலிருந்து கே .டி.சி. நகர் செல்லும் சாலையில் உள்ள ஓடை உடைக்கப்பட்டு சரியாக மூடப்படாததால் சமீபத்தில் பெய்த சிறு மழைக்கு அப்பகுதி சகதிக் காடானது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். அப்பகுதியிலுள்ள குளங்களின் வடிகாலாகவும், மழைநீர் வடிகாலாகவும் விளங்கிய ஓடை, குடியிருப்புகள் பெருகியதையடுத்து பராமரிப்பின்றி தூர்ந்துபோனது. இதனால் மழைக் காலங்களில் வெள்ளநீர் வழிந்தோட முடியவில்லை. ஓடையையும், சாலையையும் செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில்பட்டியில் மறியல்

கோவில்பட்டியில் நேற்று பெய்த பலத்த மழையால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சிறிது நேரம் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் சுமார் 3.30 மணியில் இருந்து 4.30 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. புதுரோடு விலக்கு பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலந்து சென்றதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப் பட்டனர். மந்தித்தோப்பு சாலையில் காமராஜர் நகர் முதல் தெருவில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், மழைநீர் கழிவுநீருடன் சாலையில் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்தது. ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் கோவில்பட்டி - மந்தித்தோப்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மேற்கு காவல் நிலைய போலீஸார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, `கடந்த முறையே நாங்கள் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்கு புகுந்து விட்டது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது’ என மக்கள் தெரிவித்தனர்.

கழிவுநீர் கால்வாய்களை உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெருஞ்சாணியில் 36 மி.மீ., மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் விட்டு விட்டு சாரல் பெய்து வருகிறது. மலையோரங்கள், அணைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு ஓரளவு நீர்வரத்து உள்ளது. நேற்று அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 36 மிமீ., மழை பெய்திருந்தது. புத்தன்அணையில் 35, சுருளோட்டில் 20, அடையாமடையில் 11, பாலமோரில் 5, சிற்றாறு இரண்டு, பேச்சிப்பாறையில் தலா 6 மிமீ., மழை பதிவானது.

பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 39.60 அடியாக உள்ள நிலையில் அணைக்கு விநாடிக்கு 284 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 72 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 52.65 அடியாக உள்ளது. அணைக்கு 84 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு ஒன்றில் 5.54 அடி, சிற்றாறு இரண்டில் 5.64 அடி, பொய்கை அணையில் 18 அடி, மாம்பழத்துறையாறில் 14.68 அடி, நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையில் 4.9 அடி தண்ணீர் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x