தூத்துக்குடியில் 3 முன்மாதிரி தடுப்பூசி மையங்கள் : 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அழைப்பு

தூத்துக்குடியில் 3 முன்மாதிரி தடுப்பூசி மையங்கள்  :  45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அழைப்பு
Updated on
1 min read

தூத்துக்குடியில் மூன்று நகர்ப்புற சுகாதார நிலையங்கள் முன்மாதிரி தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்களில் மாநகராட்சி அதிகாரிகள் குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.24,200 அபராதம்

இதற்காக மாநகராட்சி பகுதியில் 2 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவினர் காலை நேரத்திலும், மற்றொரு குழுவினர் மாலை நேரத்திலும் ஆய்வு செய்து, கரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் ஒரே நாளில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.24,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காவல் துறையினரும் தனியாக ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் பொது இடங்களுக்கு வருவோர் தற்போது முகக்கவசம் அணிவது அதிகரித்துள்ளது. மேலும், தூத்துக்குடியில் கரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தயக்கம் வேண்டாம்

இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா கூறும்போது, “மாநகர பகுதியில் 7 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் உள்ளன. இவை அனைத்திலும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தற்போது முள்ளக்காடு, கணேஷ்நகர், திரேஸ்புரம் ஆகிய 3 நகர்ப்புற சுகாதார நிலையங்களை முன்மாதிரி தடுப்பூசி மையங்களாக மாற்றி, கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மூன்று மையங்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும். தினமும் தலா 100 பேர் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன. பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தொழில் நிறுவனங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்களை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சில நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த நிறுவன ஊழியர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in