

வேலூர் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞரின் உடல் கிணற்றில் இருந்த நேற்று மீட்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த சித்தேரி ரயில்வே ‘கேட்’ அருகேயுள்ள ஒரு விவசாயக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவரின் உடல் மிதப்பது தெரியவந்தது. உடனே, அரியூர் காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, 40 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடலை மீட்டனர். உயிரிழந்த இளைஞரை, மர்ம நபர்கள் கொலை செய்து அவரது கை, கால்களை கட்டி கிணற்றில் வீசியிருப்பது தெரியவந்தது. இளைஞரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் உயிரிழந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.