

கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்க தற்காலிகமாக சேலம் கோரிமேடு அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100 படுக்கை வசதியுடன் கரோனா சித்தா சிகிச்சை மையம் நாளை (12-ம் தேதி) முதல் செயல்படத் தொடங்குகிறது.
கடந்த ஆண்டு கரோனா தொற்று முதல் அலை ஏற்பட்டபோது, சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க தற்காலிகமாக சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள வேளாண்துறை பயிற்சி மையத்தில் கரோனா சித்தா சிசிச்சை மையம் அமைக்கப்பட்டது.
அங்கு ஏராளமானோர் தங்கி கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.
தற்போது, சேலம் மாவட்டத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்காலிகமாக சேலம் கோரிமேடு அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
சேலம் மாநகராட்சி பகுதியில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் திருமண மண்டபங்கள், உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளி கடைபிடிப்பதும், கரோனா தொற்று பரிசோதனை செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக மணியனூர் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் கரோனா சிகிச்சை மையம் மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வருகிறது. தற்போது கோரிமேடு அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை வழங்க கரோனா சிகிச்சை மையம் 100 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இந்த மையம் நாளை (12-ம் தேதி) முதல் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், சித்த மருத்துவர்கள் வெற்றிவேல், ஆனந்த், கண்ணன், சத்தியநாராயணன், மாநகராட்சி உதவி ஆணையர் சரவணன், சுகாதார அலுவலர் ரவிச்சந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.