Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

கரோனா தடுப்புப் பணிக்கு 12 கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் : சேலம் மாநகராட்சி ஆணையர் தகவல்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பரவலை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 12 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆணையர் ரவிச்சந்திரன் பேசியதாவது:

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் சேலம் மாநகராட்சிப் பகுதிகள் 13 பகுதிகளாக பிரிக்கப்பட்டு சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுகாதார அலுவலர்களின் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க 12 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமையில் 120 பேர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில், வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறி உள்ளவர்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்துவர்.

மேலும், காய்ச்சல் கண்டறியும் முகாம், சளி தடவல் மாதிரி சேகரிப்பு முகாம், தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சிகிச்சை பெறும் விவரங்களை சேகரிப்பர். மேலும், ஒரே வீதியில் 3 பேருக்கு மேல் தொற்று இருப்பின் அப்பகுதியில் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கவனிப்பார்கள்.

தொற்றினால் பாதிக்கப்பட்டவர் கள் உள்ள தெருக்களில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுக்களை அமைத்து கண்காணிக்கும் பணி மற்றும் விழிப்புணர்வூட்டும் பணி, 45 வயத்துக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாநகர நல அலுவலர் பார்த்திபன், செயற்பொறியாளர்கள் லலிதா, பழனிசாமி, உதவி ஆணையர்கள் மருதபாபு, சாந்தி, சரவணன், சண்முகவடிவேல், ரமேஷ் பாபு, உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், சிபி சக்ரவர்த்தி மற்றும் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, சேலம் மாநகராட்சி சார்பில் 16 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 மினி கிளினிக்குகள் ஆகியவற்றில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதியில் தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் 6 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசினார். உடன் மாநகர நல அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x