Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

‘தொழிலாளர்களுக்கு கரோனா : தடுப்பூசி போட கொடிசியாவை அணுகலாம்’ :

நூறு தொழிலாளர்களுக்கு மேல் கொண்ட தொழிற்சாலை நிர்வாகங்கள், தங்களது தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போட விரும்பினால் கொடிசியாவை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலைத் தடுக்க, தமிழக அரசின் தொழில் துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால்பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொது மக்களும், தொழில் வணிக நிறுவனங்களும் தங்கள் தொழிலா ளர்களின் உடல் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்த சூழலில் தற்போது பொது முடக்கம் கொண்டுவர முடிவு செய்யப்படவில்லை என்றாலும், கடுமையான விதிமுறைகளோடு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தாமாகவே முன்வந்து 15 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை செய்து கொள்ள, அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்த விவரங்களை சுகாதாரத் துறை கேட்கும்போது அளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு தொழிற்சாலையிலும் இதற்கென ஒரு அலுவலரை நியமித்து, பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவு பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளியில் செய்து, அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

வளாகத்துக்குள் மருத்துவ வசதி மையம் வைத்துள்ள நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள், அந்த இடத்தை தடுப்பூசி போடும் மையமாக பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். நூறு தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகள் தடுப்பூசி போட விரும்பினால் கொடிசியாவை அணுகலாம்.

கோவை சுகாதாரத் துறை உதவி இயக்குநர் மூலமாக அதற்கான ஏற்பாடுகளை கொடிசியா செய்து தரும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான வழிகாட்டுதல்களை செய்து தரவும் கொடிசியா தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x