Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

சேலம் மாவட்ட வாக்கு எண்ணும் மையங்களில் - 4 அடுக்குப் பாதுகாப்பு; கேமரா பொருத்தி காண்காணிப்பு :

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கு 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங் களில் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவுற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பின்னர் அந்தந்த தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடிகளில், வேட்ப்பாளர் களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை கொண்டு வரப்பட்டன.

கெங்கவல்லி (தனி) மற்றும் ஆத்தூர் (தனி) தொகுதிகளுக்கு தலைவாசலை அடுத்த மாருதி பாலிடெக்னிக் கல்லூரியிலும், ஏற்காடு (எஸ்டி), வீரபாண்டி, சேலம் தெற்கு தொகுதிகளுக்கு அம்மாப்பேட்டை கணேஷ் கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் மேற்கு மற்றும் வடக்கு, ஓமலூர், மேட்டூர் ஆகிய தொகுதிகளுக்கு கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியிலும், எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளுக்கு சங்ககிரி விவேகானந்தா கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள், தேர்தல் நடவடிக்கை குறிப்பேடு உள்ளிட்டவைகள் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரிபார்த்தனர்.

வாக்குப்பதிவு ஆவணங்கள் சரிபார்ப்பின்போது, ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால், அதன் அடிப்படையில், மறு வாக்குப்பதிவு தேவைப்படுமா? என்பதுதீர்மானிக்கப்படும். ஆனால்,மாவட்டத்தின் 11 தொகுதிகளிலும் முறையாக வாக்குப் பதிவு நடைபெற்றது உறுதிபடுத்தப் பட்டது. இதைத் தொடர்ந்து, அந்தந்த தொகுதிகளுக்காக பாது காப்பு அறைகளில், வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

தொடர்ந்து, 4 வாக்கு எண்ணும் மையங்களிலும், அங்குள்ள பாதுகாப்பு அறைகளுக்கும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படையினர் துப்பாக்கி ஏந்திய போலீஸார் 3 அடுக்குகளிலும், 4-வது அடுக்கில் சேலம் மாநகர போலீஸார் உள்ளிட்ட 501 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப் பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

எல்இடி டிவி மூலம் காண்காணிப்பு

எடப்பாடி மற்றும் சங்ககிரி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, சங்ககிரி விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு அறைகள் அமைக்கப் பட்டு, அதில் எல்இடி டிவிக்கள் பொருத்தப்பட்டு, வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் ஆய்வு செய்து பார்வையிட தேவையான அனைத்து வசதிகளும் செய்யப் பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களில், கூடுதல் இருப்பு பாதுகாப்பு அறைகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் வைத்து, சீலிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x