Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - பூத் ஸ்லிப் கிடைக்காமல் வாக்காளர்கள் தவிப்பு :

உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்காளர் ஒருவருக்கு வழங்க பூத் ஸ்லிப்பை தேடும் பணியாளர்.

கள்ளக்குறிச்சி

வாக்காளர்களைக் கவர தேர்தல் ஆணையம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதிரி வாக்குச் சாவடிகள் என்ற பெயரில் அலங்காரங்களுடன் வாக்குச் சாவடிகளை அமைத்திருந்தது. அதே நேரத்தில் சில வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்காததால் வாக்காளர்கள் பலர் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் செல்லும் அவலமும் நிகழ்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய 4 தொகுதிகளுக்கும் 1,569 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் வாக்காளர்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் விதமாக 7 மாதிரி வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. அலங்கார தோரணங்களுடன் அமைக்கப்பட்ட இந்த வாக்குச் சாவடிகளில் இரு சுகாதாரப் பணியாளர்கள் கரோனா வழிகாட்டுதலை பின்பற்றி வாக்களிக்கும் முறை குறித்து விளக்கினர்.

இந்த மாதிரி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தாலும், வழக்கமாக உள்ள சில வாக்குச்சாவடிகளில் பூத் ஸ்லிப் என்னும் வாக்களார் விவரச் சீட்டு, வாக்காளர்களுக்கு முன் கூட்டியே சென்றடையவில்லை. இதனால் வாக்காளர்கள் வாக்குச் சாவடியில் குழப்ப நிலை நீடித்தது. சிலர் வாக்களிக்காமலேயே திரும்பினர்.

இந்த நிலையில் வாக்குச் சாவடிக்குள் இருந்த அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தங்களிடமிருந்த ஆண்ட்ராய்டு செல்போன் மூலம், தேர்தல் ஆணைய இணையத்தில் விவரத்தைப் பெற்று, வாக்களித்தனர்.

இதற்கிடையே, பூத் ஸ்லிப் வழங்கும் பணியாளர்கள் வாக்குச் சாவடியில் அமர்ந்தவாறு, வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கிய சம்பவங்களும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

உளுந்தூர்பேட்டையில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சவாடியில் வாக்காளர் ஒருவர், “முன்கூட்டியே பூத் ஸ்லிப் வீடு தேடி வரும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அப்படி வரவில்லை” என்று கடிந்து கொண்டார்.

அதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய ஊழியர், “இரு தினங்களுக்கு முன் தான் பூத் ஸ்லிப் எங்களுக்கு வந்தது. இரு தினங்களில் நாங்கள் எத்தனை பேருக்கு கொடுக்க முடியும்? ”என்று கேட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x