பல வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலிகள் இல்லாததால் : வாக்களிக்க வந்த முதியோர், மாற்றுத்திறனாளிகள் அவதி :

பாளையங்கோட்டை காதுகேளாதோர் பள்ளியில்  அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலி வசதி செய்து தரப்படவில்லை. இதனால்  தன்னார்வலர்  மூலம் தூக்கிச் செல்லப்பட்டும், கைத்தாங்கலாக நடத்தி செல்லப்பட்டும் சிரமப்பட்டு அவர்கள் வாக்குகளை செலுத்தினர்.  	         படங்கள்: மு. லெட்சுமி  அருண்.
பாளையங்கோட்டை காதுகேளாதோர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலி வசதி செய்து தரப்படவில்லை. இதனால் தன்னார்வலர் மூலம் தூக்கிச் செல்லப்பட்டும், கைத்தாங்கலாக நடத்தி செல்லப்பட்டும் சிரமப்பட்டு அவர்கள் வாக்குகளை செலுத்தினர். படங்கள்: மு. லெட்சுமி அருண்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் பல வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலிகள்இல்லாததால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியுற்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவை தொகுதிகளில் உள்ள 259 வாக்குச்சாவடி மையங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான 259 மடக்கு சக்கரநாற்காலிகள் கடந்த 29-ம் தேதி அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது தொடர்பாக ஏதும்உதவி பெற 7598000251 என்ற எண்ணைதொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. விஷ்ணு தெரிவித்திருந்தார்.

ஆனால், வாக்குப்பதிவு நாளானநேற்று பல்வேறு வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலிகள் இல்லாமல் முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க கடும் அவதியுற்றனர்.

பாளையங்கோட்டையில் காதுகேளாத மாணவ, மாணவியர் பயிலும்மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியிலும் சக்கரநாற்காலி இல்லாமல் பலரும் வாக்களிக்க சிரமப்பட்டனர்.

பல வாக்குச் சாவடிகளில் முதியோரையும், மாற்றுத்திறனாளிகளையும் அங்கிருந்தவர்கள் தூக்கிக்கொண்டு வாக்குச் சாவடிக்குள் சென்றனர். வாக்களித்த பின்னர் மீண்டும் அங்கிருந்து தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர். 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏராளமாக செலவு செய்யும் தேர்தல் ஆணையம், ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் சக்கர நாற்காலி மற்றும் தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய தவறிவிட்டது குறித்து முதியோர், மாற்றுத்திறனாளிகளுடன் வந்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.

பாளையங்கோட்டை தூய யோவான்பள்ளி வாக்குச் சாவடிக்கு அழைத்துவரப்பட்ட 70 வயது வேலம்மாள், வாக்களித்துவிட்டு வந்தபின் மீண்டும் அவரை வீட்டுக்குஅழைத்துச் செல்ல யாரும் வரவில்லை என்பதால் தவித்தார். இதுபோல் பலமுதியோர்களும் தவிப்புக்கு ஆளாகியிருந்தனர்.

பல இடங்களில் வாக்குச் சாவடி சீட்டுகளை வாக்காளர்களுக்கு முறையாக விநியோகம் செய்யாததால் வாக்காளர்கள் குழப்பம் அடைய நேர்ந்தது.

அம்பாசமுத்திரம் தொகுதிக்குஉட்பட்ட பல்வேறு இடங்களிலும்வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கப்படவில்லை. வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்கு வந்தபோது பலருக்கு அச்சீட்டுகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை மூலம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கையுறைகளும் வழங்கப்பட்டன.

வாக்குச் சாவடிகளுக்குள் செல்லும் முன் சானிடைஸர் மூலம் கைகளை சுத்தம் செய்யுமாறு வாக்காளர்கள் பணிக்கப்பட்டனர். வாக்களித்துவிட்டு திரும்பியபின் கையுறைகளை கழற்றி அங்குள்ள பிளாஸ்டிக் தொட்டியில் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்குச் சாவடிகளுக்கு வந்த வாக்காளர்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிந்திருந்தனர். அவ்வாறு அணியாமல் வந்தவர்ளுக்கு முகக் கவசங்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in