

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை செலுத்திவிட்டு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு மக்கள் திரும்புவதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதியது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதை யொட்டி, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதால், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர், தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று வாக்களித்து விட்டு, தாங்கள் பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப தொடங் கினர்.
இதனால், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம் மற்றும் போளூர் நகரில் உள்ள பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது. பெங்களூரு, சேலம், திருப்பூர், சென்னை, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பெரு நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தன. பெங்களூரு மற்றும் திருப்பூர் போன்ற நகரங் களுக்கு போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால், பேருந்துகளில் இடம் பிடிக்க முண்டியடித்து பயணிகள் ஏறினர்.
சென்னைக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டதால், அண்டை மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து சேவை துண்டிக் கப்பட்டது. தகரங்கள் பெயர்ந்து, காதுகளை செவிடாக்கும் வகையில் ஒலி எழுப்பியபடி இயங்கும் நகர பேருந்துகளை சிறப்பு பேருந்துகள் என கூறி 25 சதவீத கூடுதல் கட்டணத்துடன் இயக்கியது பயணிகளை அதிருப்தியடைய செய்துள்ளது. மேலும், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கட்டண சலுகையும் கிடையாது (பாதி கட்டணம்) என நடத்துநர்கள் கூறியதால், பயணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அண்டை மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து களை சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும், நகரப் பேருந்துகளை அண்டை மாவட் டங்களுக்கும் இயக்கியதால், கிராமப்புற பேருந்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனால், கிராமங்களில் இருந்து நகரப் பகுதிக்கு வர முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இதில், பெரு நகரங்களுக்கு செல்பவர்கள் திண்டாடினர். சிறப்பு பேருந்துகளை இயக்கும்போது, கிராமப்புற சேவையை துண்டிப்பது என்பது வாடிக்கையாக உள்ளது. இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.