ஈரோட்டில் காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு :
ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் நேற்று தபால் வாக்கினை பதிவு செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 2300 காவலர்கள் தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஈரோடு, கோபி, பெருந்துறை, பவானி ஆகிய இடங்களில் தபால் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
ஈரோடு நகர காவலர்களுக்கு ஈரோடு மாநகராட்சி பன்னீர் செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பவானி துணைப் பிரிவு காவலர்களுக்கு காடையம்பட்டி கே.எம்.பி.மஹாலிலும். கோபி மற்றும் சத்தியமங்கலம் துணைப்பிரிவுகளைச் சேர்ந்த காவலர்களுக்கு மொடச்சூர் சாலையில் உள்ள கே.எம்.எஸ். மண்டபத்திலும், ஈரோடு கிராமிய துணைப்பிரிவு காவலர்களுக்கு பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கொங்கு மெட்ரிகுலேசன் பள்ளியிலும் தபால் வாக்குப்பதிவு நடந்தது.
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன், மொடச்சூர் சாலையில் உள்ள கே.எம்.எஸ். மண்டபத்தில், கோபி மற்றும் சத்தியமங்கலம் துணைப்பிரிவுகளைச் சேர்ந்த தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் தபால் வாக்குப்பதிவினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கோபி தேர்தல் அலுவலர் பழனிதேவி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
