11 தொகுதிகளுக்கு 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் : அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன்.
எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன்.
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்து, வாக்குகளை எண்ணுவதற்கு வசதியாக, 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் ஆய்வு மேற்கொண்டார்.

சேலத்தை அடுத்த கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஓமலூர், மேட்டூர் தொகுதி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு தொகுதி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு (எஸ்.டி), சேலம் தெற்கு தொகுதி, வீரபாண்டி தொகுதி ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் சேலம் அம்மாபேட்டை  கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு தலைவாசல் வட்டம் மணிவிழுந்தான் கிராமம் (தெற்கு)  மாருதி கல்வி நிறுவன வளாகத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி, சங்ககிரி ஆகிய 2 தொகுதிகளுக்கு சங்ககிரி வட்டம் அம்மானி கிராமத்திலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எடப்பாடி, சங்ககிரி ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின்னர் அவர் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையங்களில், பொதுப் பணித்துறையின் மின் பிரிவு, கட்டட, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலர்கள், வருவாய்த் துறை, காவல் துறை, அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு வசதிகள், வாக்குப் பெட்டிகள் இருப்பு அறைகளுக்கான பாதுகாப்பு வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், தபால் வாக்குகள் இருப்பு வைப்பதற்கான அறைகள் ஆகியவற்றில் தேவையான பாதுகாப்பு வசதிகள், மின்சார வசதிகள், வாக்கு எண்ணும் இடங்களில் தேவையான தடுப்பு வேலிகள் ஆகியவற்றை அமைத்திருக்க வேண்டும்.

வாக்கு எண்ணுவதற்கு தேவையான மேஜைகள் அமைத்தல், வாக்குப் பெட்டிகள் வைப்பு இருப்பு அறைகளில் இருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வருவதற்கான தனி பாதைகள் அமைத்தல், முகவர்கள் வருவதற்குத் தேவையான தனி பாதைகள் அமைத்தல் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும்’ என்றார்.

ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எடப்பாடி- தனலிங்கம், சங்ககிரி- வேடியப்பன் உட்பட தொடர்புடைய அலு வலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in