தென்காசி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு -  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு :

தென்காசி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு :

Published on

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவி பாட் இயந்திரங்கள் ஆகியவை கணினி மூலம் சுழற்சி முறையில் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவை, வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, இரண்டாம்கட்ட மாக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் சமீரன் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தொடங்கிவைத்தனர்.

இதில், சங்கரன்கோவில் (தனி) தொகுதிக்கு உட்பட்ட 365 வாக்குச்சாவடி மையங்களுக்கு 438 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 438 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 475 விவி பாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. வாசுதேவநல்லூர் (தனி) தொகுதிக்கு உட்பட்ட 336 வாக்குச்சாவடி மையங்களுக்கு 404 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 404 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 437 விவி பாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 411 வாக்குச்சாவடி மையங்களுக்கு 988 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 494 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 535 விவி பாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தென்காசி தொகுதிக்கு உட்பட்ட 408 வாக்குச்சாவடி மையங்களுக்கு 980 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 490 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 531 விவி பாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட 364 வாக்குச்சாவடி மையங்களுக்கு 437 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 437 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 474 விவி பாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைந்துள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடர்பாக அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கருத்து கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in