அரசு ஊழியர்களுக்கான அஞ்சல் வாக்குப் பதிவு தொடக்கம் :

அரசு ஊழியர்களுக்கான அஞ்சல் வாக்குப் பதிவு தொடக்கம் :
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, முதன்மை வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் உட்பட 22,256 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு கடந்த மாதம் 14-ம் தேதி முதல்கட்டப் பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம்கட்டப் பயிற்சி முகாம்கள் நேற்று நடைபெற்றன.

மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும், வெவ்வேறு இடங்களில் பயிற்சி நடைபெற்றது. கோவை கிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் நேற்று பார்வையிட்டார்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, ‘‘தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத தொடக்கத்தில் இறுதிக்கட்டப் பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். இன்று நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொள்ளாத 1,444 பேரிடம் விளக்கம் கேட்கப்படும். உரிய முகாந்திரமின்றி, தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அஞ்சல் வாக்குப்பதிவு தொடக்கம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘வேட்பாளர்களின் பிரதிநிதிகளிடம் அஞ்சல் வாக்கு செலுத்தும் பெட்டி திறந்து காண்பிக்கப்பட்டது. பெரும்பாலான அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தினர். வாக்குப்பதிவன்று காலை வரை அஞ்சல் வாக்கு செலுத்த காலஅவகாசம் உள்ளது’’ என்றனர்.

திருப்பூர்

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில், 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து 427 வாக்குகள் பதிவாகின. இதேபோல, மாவட்டம் முழுவதும் மற்ற பயிற்சி மையங்களில் அஞ்சல் வாக்குகளை அரசு ஊழியர்கள் செலுத்தினார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in