

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் பொது விடுமுறை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்ட தலைவர் நித்தியானந்தம், செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையால் தேர்தல் நாளன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், தொடர்ந்து மூன்று நாட்கள் தேர்தல் பணியாற்றும் நிலை உள்ளது.
தேர்தல் நாளான ஏப்., 6-ம் தேதி அன்று மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து, வீடுகளுக்கு செல்ல இரவு நேரமாகிவிடும். எனவே, இதனை கருத்தில் கொண்டு, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் பொது விடுமுறை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.