

சேலத்தில் குடிநீர் குழாய் அமைத்து கொடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
சேலம் நான்கு ரோட்டில் இருந்து சத்திரம் வரையிலான பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கான்கிரீட் சாலை அமைக்கும் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர்.
தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை போலீஸார், பொதுமக்களை சமாதானம் செய்து, அவர்கள் கோரிக்கை குறித்து கேட்டனர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:
சீர்மிகு நகர திட்டத்தில் கான்கிரீட் சாலை அமைத்தால், பத்து ஆண்டுக்கு சாலையை தோண்ட முடியாது.
எனவே, பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் குழாய் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். தற்போது, சாலை பணி நடந்து வரும் நிலையில், குடிநீர் குழாய் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதுதொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்று போலீஸார் தெரிவித்ததை அடுத்து, சாலை மறியல் முயற்சியில் ஈடுபட வந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.