

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு தேவையான கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிவகங்கை மாவட்டத்திலிருந்து வந்தது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளதால், இதற்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கூடுதல் இயந்திரங்கள் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 750 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வர வழைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்க்கும் பணி நடந்தது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 4,280 வாக்குச்சாவடிகள் மற்றும் துணை வாக்குச்சாவடிகளில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு 20 சதவீதம் கூடுதல் ஒதுக்கீட்டுடன் 5,142 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5,142 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 34 சதவீதம் கூடுதல் ஒதுக்கீட்டுடன் 5,740 வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்து, 11 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை அந்தந்த தொகுதிகளில் இருப்பு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கூடுதலாக வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், முதல்நிலை சரிபார்ப்பு பணி நடந்தது.
இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.