Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

தேர்தல் பறக்கும் படையினரால் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - ரூ.3.51 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் :

கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினரால் கடந்த 20-ம்தேதி வரை ரூ.3.51 கோடி பணம்,பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் கிரண்குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் விநியோகிப்பது, ரூ.50,000-க்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பணம் மற்றும் இதர தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.11,93,110, ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.9,50,800, சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.10,93,850 மற்றும் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.12,30,000 என மொத்தம் ரூ.44,67,760 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களிடம் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.2,81,790 மற்றும் சங்கராபுரம்சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.7,25,350-ம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 210 கொடிகள் மற்றும் 95 டி-ஷர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை ரொக்கப்பணம் ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 88 ஆயிரத்து 412, ரூ. 5 லட்சத்து 34 ஆயிரத்து 194 மதிப்புள்ள பரிசு பொருட்கள், ரூ. 28 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், ரூ. 2 லட்சம் மதிப்பிலான வாகனம் ஒன்றும், ரூ. 30 ஆயிரத்து 338 மதிப்பிலான மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 944 ஆகும்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 20-ம் தேதி வரை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.80,79,180 பணம் மற்றும் அரிசி, புகையிலை பொருட்கள், கஞ்சா பொட்டலங்கள், சாராயம், மதுபாட்டில்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள் என ரூ.21,64, 271 மதிப்பிலான பொருட்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 2 லட்சத்து 43 ஆயிரத்து 451 மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேர்தல் பறக்கும் படையினரால் கடந்த 20-ம் தேதி வரை ரூ.3.51 கோடி பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x