

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்லதுரை (39). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை வழக்கு தொடர்பாக ரவுடிகள் வசூர்ராஜா, சாரதி, பாலமுருகன், சதீஷ், சுரேஷ், மணிகண்டன், சின்னவர் உள்பட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஈடுபட்டு வந்ததை அடுத்து, சாரதி, பாலமுருகன், சதீஷ், சுரேஷ், மணிகண்டன், சின்னவர் ஆகிய ஆறு பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவக்குமார், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமாருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்த ஆறு பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.