

சேலத்தில் கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.2.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
முகாமில் காய்ச்சல் மற்றும் சளி அறிகுறி உள்ளவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையானவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
பொது இடங்கள், வணிக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளி கடைபிடிப்பதும் தொற்றில் இருந்து பாதுகாக்கும். ஆனால், பலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவதும், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருப்பதும் அதிகரித்து வருகிறது.
கரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வூட்டும் பணிகளையும், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு மாநகராட்சி சிறப்பு குழுக்கள் மூலம் அபாராதம் விதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டி உழவர் சந்தை மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் நேற்று கரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வூட்டும் பணி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள், உழவர் சந்தை மற்றும் சாலையின் இருபுறமும் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி, முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிவுரை வழங்கினார்.
பின்னர் அவர் கூறும்போது, “கடந்த 9 நாட்களில் முகக் கவசம் அணியாத 574 பேருக்கு தலா ரூ.200 வீதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 193 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500 வீதமும், 3 வணிக நிறுவனத்துக்கு தலா ரூ.5,000 என மொத்தம் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 300 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது” என்றார்.